இந்தியா முழுவதும் 77 சுதந்திர தினம் வரும் செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து நாடு முழுவும் விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய மூன்று நாட்களிலும் விடுமுறை தினமாக பெரும்பாலான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெரும்பாலான நிறுவனங்களில் வேலை செய்வோர் திங்கள்கிழமை விடுமுறை எடுத்துள்ளதால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை நாட்களாக வருகிறது. இதனால் சுதந்திர தினத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக 1100 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக சொந்த ஊரிலிருந்து சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற நகரங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறை சமயங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அந்த நேரத்தில் பேருந்துகள், ரயில்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
இதுபோன்ற சமயங்களில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. தொடர் விடுமுறை மட்டுமல்லாமல் வார இறுதி நாள்களிலும் தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்து பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தின விழா செவ்வாய்க் கிழமை வருகிறது. சனி, ஞாயிறு வார விடுமுறையை சேர்த்து சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கு திங்கள் கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நான்கு நாள்கள் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப உள்ளனர்.
இதனால் சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், கோவை போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 11, 12, 13,15 ஆகிய நாள்களில் மொத்தம் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், மக்கள் கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க முன்பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.