SSC GD Constable Recruitment 2024: மத்திய ஆயுதப் படைகளில் உள்ள 39,481 கான்ஸ்டபிள்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 14ஆம் தேதி கடைசி நாளாகும்.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மத்திய ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள்கள் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய ஆயுதப் படைகளில் (CAPFs) காலியாக உள்ள காவலர் (பொதுப் பணி) மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காலியாக உள்ள தலைமையக காவல் படை மற்றும் ரைபிள் மேன் (பொதுப் பிரிவு) தேர்வு பணியிடங்களுக்கான ஆள்சேர்கை அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதன்கீழ், மொத்தம் 39,481 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆண்கள் காவல் படையின் கீழ் 35,612 இடங்களும், பெண்கள் பிரிவின் கீழ் 3,869 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01-01-2025 அன்று வயது 18க்கு மேலும், 23க்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடையவர்கள்.
எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, விரிவான மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகளில் தேர்வு முறை இருக்கும். எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஆயுதப் படைகளின் விருப்பங்கள் படியும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். தேர்வு வினாத்தாள்கள் இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி மற்றும் கொங்கனி மொழிகளில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ssc.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 14.10.2024 மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசித் தேதி 15.10.2024 ஆகும். ஆட்சேர்ப்பு அறிவிக்கையை ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ காலிப் பணியிட அறிவிப்பு https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CTGD_2024_09_05.pdf மூலமாக அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு https://ssc.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.