TNPSC Exam Group 4 Exam: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், கூடுதலாக 2,208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 23 வகையான குரூப் 4 பதவிகளுக்கு, 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ) தேர்வு ஜூன் 9ம் தேதி நடந்தது. 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதினர். செப்., 11ல் கூடுதலாக 480 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன.
அறிவிப்பானையில் முதலில் 6,244 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இந்நிலையில் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அதிகரித்து வருவதால் நிரப்பப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் இடங்களை எதிர்பார்த்த தேர்வர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதன் தொடர்ச்சியாக, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வந்தது. 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதியுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதம் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதனால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது. இதற்கான விவரங்களை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அண்மையில் நடந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விலும் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.